இமயமலை பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட கோரமான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் நேபாளம் மற்றும் சீனாவை உலுக்கியுள்ளன. இந்த நிலையில், திபெத் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த “புவியியல் பேரிடர் அணை”  உடைந்துவிட்டதனால்தான் இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்ற நேபாளத்தின் குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தத் தகவலை “போலிச் செய்தி” என்றும் பெய்ஜிங் தரப்பு வர்ணித்துள்ளது.

மாறாக, நேபாளப் பகுதியில்தான் இது  உருவானதாக சீனா தெரிவித்துள்ளது. அதாவது, நேபாள எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு காரணமாகவே மிகப்பெரிய அளவிலான மண் மற்றும் பாறைகள் சரிந்து இந்த விபத்து நேரிட்டதாக சீனத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. எல்லைப் பகுதியான கியிரோங் – ராசுவாகடி பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் இரு நாடுகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக, இந்த விபத்து குறித்து நேபாளத்திற்கு சீனா முன்கூட்டியே எச்சரிக்கை எதையும் வழங்கவில்லை என்ற புகாரும் எழுந்தது. இதற்குப் பதிலளித்துள்ள சீனத் தூதரகம், “குற்றச்சாட்டுகள் எங்குமே உதவாது, ஒருங்கிணைந்த கூட்டுப் பணியே உயிர்களைக் காப்பாற்றும்” என்று சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. மேலும், உரிய நேரத்தில் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதாகவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் சர்வதேச நிபுணர்களின் தரவுகளின்படி, இமாலய மலையின் உயர் பகுதியில் பெரிய அளவிலான பனி மற்றும் பாறைப் பகுதி திடீரெனச் சரிந்து ‘லெண்டே கோலா நதிப் பகுதிக்குள் விழுந்துள்ளது.  பனிப்பாறைச் சரிவு காரணமாக உருவான இந்த ராட்சத சேறு மற்றும் நீர்ப்பெருக்கு, சீனாவின் கியிரோங் பகுதியைக் கடந்து நேபாளத்திற்குள் பாய்ந்து பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் இது நிலநடுக்கத்தால் ஏற்பட்டதாகக் கருதப்பட்டாலும், இது ஒரு நிலநடுக்கம் அல்ல மாறாக பனிப்பாறைச் சரிவால் உருவான அதிர்வு என்பதை அறிவியல் பூர்வமான பகுப்பாய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த கோர விபட்டில் நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுற்றுலாப் பயணிகள், யாத்திரிகர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் உட்பட 1,000-த்திற்கும் அதிகமானோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கைலாஷ் யாத்திரை சென்ற இந்தியர்கள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் மாயமாகியுள்ளதால், இந்த விபத்து சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர் மழை மற்றும் கடினமான மலைப்பகுதிகளுக்கு இடையே, ஹெலிகாப்டர்கள் உதவியுடன் இரு நாடுகளின் மீட்புக் குழுவினரும் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.