பெங்களூரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, தனியார் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் 20 வயது மாணவி ஒருவர், தனது வீட்டு உரிமையாளர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். கடந்த இரண்டரை மாதங்களாக அந்த வீட்டில் தங்கிப் படித்து வரும் அம்மாணவி, 60 வயதான வீட்டு உரிமையாளர் கமலேஷ் குமார் என்பவர் தனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை வீட்டில் முடிவடையாத பழுதுபார்ப்புப் பணிகளைப் பார்வையிட கமலேஷ் குமார் வந்துள்ளார். அந்த நேரத்தில் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். பணிகளைப் பார்த்த பிறகு, அம்மாணவியிடம் அவரது கல்லூரி வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்துப் பேசத் தொடங்கிய கமலேஷ் குமார், திடீரென மாணவியின் கையில் இருந்த மருதாணியைப் பார்ப்பது போல் கையைப் பிடித்துள்ளார்.
மாணவி உடனடியாகத் தனது கையை விலக்க முயன்றபோதும், கமலேஷ் குமார் அவரை வலுக்கட்டாயமாகத் தன் அருகில் இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டுள்ளார். மாணவி விலகப் போராடிய நிலையிலும், அவரது இரு கன்னங்களிலும் முத்தமிட்டு, “பயப்படாதே அம்மா” என்று கூறியவாறே அவருக்கு முறையற்ற வகையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர், சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பும்போது, தான் மாணவியுடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பி.என்.எஸ் சட்டத்தின் 74 மற்றும் 75 ஆகிய பிரிவுகளின் கீழ் கமலேஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி, முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
வீட்டு உரிமையாளரே வாடகைக்கு இருக்கும் மாணவியிடம் இப்படி அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீடுகளில் தனியாகத் தங்கிப் படிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் விவாதங்களையும் இந்தத் தொடர் விசாரணை மீண்டும் எழுப்பியுள்ளது.
