சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் தேசியக் கொடி பேரணி நடத்த பா.ஜ.க. அனுமதி கோரியிருந்தது. ஆனால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களைக் கூறி கோவை மாநகர காவல்துறை இதற்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து பா.ஜ.க. கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார். சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியக் கொடியைப் பிடித்து உயிர் நீத்த நாட்டில், அமைதியான முறையில் கொடி ஏந்திச் செல்ல தடை விதிப்பது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், திராவிடர் கழகத்திற்கும் பா.ஜ.க.வுக்கும் அனுமதி மறுக்கப்படும் நிலையில், த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவது ஏன் என்றும் நீதிபதி வினவினார். தேசியக் கொடி ஏந்தி பேரணி செல்வது என்ன பாவச் செயலா என்றும், பேரணிக்கு அனுமதி கேட்டுள்ள கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானா என்றும் காட்டமாகக் கேட்டார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்த நடைமுறைகளைப் போல அதிகாரிகள் செயல்படக் கூடாது என்று அறிவுறுத்திய நீதிபதி, பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து விரைந்து முடிவெடுக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக, ஆளுங்கட்சியின் கூட்டணி அமைப்புகளுக்குத் தடையின்றி அனுமதி வழங்கும் காவல்துறை, தேசியக் கொடி பேரணிக்கு மட்டும் அனுமதி மறுத்து ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக பா.ஜ.க. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
