மகாராஷ்டிராவில் கணவன் மதுபோதையில் இருந்த நிலையிலும், பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் அவசர நிலையைக் கருத்தில்கொண்டு, காவல்துறை அதிகாரி ஒருவர் தானாக முன்வந்து காரை ஓட்டி மருத்துவமனையில் சேர்த்த நெகிழ்ச்சிச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

வழக்கமான வாகனத் தணிக்கையின் போது மகாராஷ்டிர காவல் துறையினர் ஒரு காரை மறித்துச் சோதனையிட்டனர். அப்போது காரை இயக்கிய நபர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. அந்த வாகனத்தில் அவரது கர்ப்பிணி மனைவியும் உடன் இருந்தார். பிரசவத்துக்காக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசரச் சூழல் இருந்ததால், உடனடியாகச் சென்று சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

போக்குவரத்து விதிகளை மீறியதற்காகச் அபராதம் விதித்து நேரத்தை வீணடிக்காமல், பெண்ணின் உடல்நிலையைப் புரிந்துகொண்ட காவலர் உடனடியாகச் செயல்பட்டார். கணவனைப் பின்புற இருக்கையில் அமரச் செய்துவிட்டு, தாமே ஸ்டீயரிங்கைப் பிடித்து காரை மருத்துவமனைக்கு விரைவாக ஓட்டிச் சென்றார். சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. காவல்துறையின் இந்தத் துரித நடவடிக்கையும் மனிதநேயமும் அந்தக் குடும்பத்தினரால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத தருணமாக மாறியுள்ளது.

“>

 

சட்டம் தன் கடமையைச் செய்யும் அதே வேளையில், ஆபத்தில் தவித்த ஒரு குடும்பத்திற்குப் பக்கபலமாக நின்று காவல்துறை காட்டிய மனிதாபிமானம் பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது.