தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளைக் கைப்பற்ற பல அதிகாரிகளும் ரகசியமாகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போட்டியில் மற்றவர்களுக்குத் தெரியாமல் ஓய்வுபெறவிருக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஆர். ராதாகிருஷ்ணன் மிக அமைதியாகத் தனது காய்களை நகர்த்தி அந்தப் பதவியைப் பெற்றுள்ளார்.

வரும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வுபெற உள்ள ராதாகிருஷ்ணன், ஓய்வுக்குப் பிறகும் அரசுப் பதவியில் தொடர விரும்பினார். தலைமைச் செயலாளருடன் தனக்கிருக்கும் நல்லுறவின் மூலம் அவர் மேற்கொண்ட ஆலோசனையின் அடிப்படையில், ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவியை அவருக்கு வழங்குவதற்கான ஒப்புதல் உயர் மட்டத்தில் பெறப்பட்டுள்ளது.

இருப்பினும், மின்வாரியத் தலைவராகப் பணியாற்றிய ஒருவரை அதே துறையைக் கண்காணிக்கும் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக உடனே நியமித்தால் தேவையற்ற சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழும் என்ற சிக்கல் ஏற்பட்டது.

இதனால், அவரை முதலில் ஒரு நடுநிலையான சாதாரணப் பணிக்கு மாற்றவும், செப்டம்பர் மாத இறுதியில் அவர் ஓய்வுபெற்ற பிறகு அக்டோபர் மாதத்தில் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கவும் ரகசியத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

“>

 

இந்தப் பின்னணி நகர்வுகள் எதுவும் தெரியாமல், ஓய்வுபெற்ற பல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இந்தப் பதவிக்காக தற்போதும் கடுமையாகப் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்தத் திரைக்குப் பின்னால் நடக்கும் வியூகங்கள் மூலம் ராதாகிருஷ்ணன் அக்டோபர் மாதம் அந்தப் பதவியில் அமர்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.