இந்திய அரசியலில் தேசியக் கட்சிகள் மட்டுமே கோலோச்சி வந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது பிராந்தியக் கட்சிகளும் பொருளாதார ரீதியில் ராட்சத வளர்ச்சியை எட்டியுள்ளன. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ள 2024-25 நிதியாண்டிற்கான புதிய நிதி அறிக்கை, இந்திய அரசியலின் அஸ்திவாரத்தையே அதிர வைக்கும் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ADR வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் தரவுகளின்படி, கடந்த 2023-24 நிதியாண்டைக் காட்டிலும் 2024-25 நிதியாண்டில் பிராந்தியக் கட்சிகளின் நிதி மற்றும் நன்கொடை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2023-24 நிதியாண்டு: பிராந்தியக் கட்சிகளுக்குக் கிடைத்த மொத்த நன்கொடை வெறும் 347.69 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் 2024-25 நிதியாண்டு: இந்தத் தொகை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து 1,051.56 கோடியை எட்டியுள்ளது. இது சுமார் 198% மாபெரும் வளர்ச்சி ஆகும்.
குறிப்பாக, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைத் தவிர்த்து ஆம் ஆத்மி (AAP), பகுஜன் சமாஜ் (BSP), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) போன்ற மற்ற தேசியக் கட்சிகள்கூட நிதி திரட்டுவதில் பிராந்தியக் கட்சிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டுவிட்டன என்பதுதான் இதில் ஆச்சரியமான உண்மை.
இந்த நிதி வசூலில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் அதிமுக ஆகிய முதல் ஐந்து பிராந்தியக் கட்சிகள் மட்டும் மொத்தமாக 840.12 கோடி ரூபாயை வாரிக்குவித்துள்ளன. இது பிராந்தியக் கட்சிகளுக்குக் கிடைத்த மொத்த நிதியில் 79.9% ஆகும். பிராந்தியக் கட்சிகளின் இந்த மலைக்க வைக்கும் நிதிக்கு முக்கியக் காரணம் பெரு நிறுவனங்களும், தேர்தல் அறக்கட்டளைகளும்தான்.
2024-25 ஆம் ஆண்டில் பிராந்தியக் கட்சிகளுக்குக் கிடைத்த மொத்த நன்கொடையில் 61.33% (சுமார் 644.93 கோடி ரூபாய்) நேரடி கார்ப்பரேட் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்தே வந்துள்ளது. ‘ப்ரூடன் எலக்டோரல் டிரஸ்ட் மட்டும் இரண்டு நிதியாண்டுகளையும் சேர்த்து பிராந்தியக் கட்சிகளுக்கு 434 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ளது. இதில் 253.50 கோடி ரூபாய் 2024-25 நிதியாண்டில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ‘டைகர் அசோசியேட்ஸ்’ நிறுவனம் 160 கோடி ரூபாயை வாரி வழங்கி இரண்டாம் இடத்தில் உள்ளது.
மாநில வாரியாகப் பார்த்தால், தில்லி (433.77 கோடி), மேற்கு வங்கம் (172.93 கோடி) மற்றும் மகாராஷ்டிரா (158.80 கோடி) ஆகிய மாநிலங்களில் இருந்துதான் அதிக அளவிலான நிதிகள் குவிந்துள்ளன. தேர்தல் ஆணைய விதிகளின்படி 20,000 ரூபாய்க்கும் குறைவான நன்கொடைகளுக்கு வழங்குபவரின் விவரங்களை வெளியிடத் தேவையில்லை. இதைத்தான் பிராந்தியக் கட்சிகள் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியுள்ளன.
2023-24 இல் வெறும் 6.62 கோடியாக இருந்த இந்தத் தொகை, 2024-25 இல் 302.67 கோடி ரூபாயாக (4470% உயர்வு) விஸ்வரூபம் எடுத்துள்ளது. ரொக்கமாகப் பெறப்பட்ட நன்கொடை 6.54 கோடியிலிருந்து 301.44 கோடி ரூபாயாக அதிரடியாக உயர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் கடந்த ஆளுங்கட்சியான திமுக 2024-25 இல் அதிகபட்சமாக 365.78 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இதில் 300.64 கோடி ரூபாய் (சுமார் 82%) பெயர் அறிவிக்கப்படாத நன்கொடையாளர்களிடமிருந்தும், 20,000 ரூபாய்க்கும் குறைவான ரொக்க நன்கொடைகளாகவும் காட்டப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முறையான பான் கார்டு விவரங்கள் இல்லாத நன்கொடைகளின் மதிப்பு 7.68 கோடியிலிருந்து 329.58 கோடி ரூபாயாக விண்ணைத் தொட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, காசோலைகள் மூலம் வந்த 184.96 கோடியில் பெரும்பான்மையான தொகைக்கு (184.08 கோடி) முகவரி மற்றும் பான் விவரங்கள் முழுமையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், நாட்டில் உள்ள 67 அங்கீகரிக்கப்பட்ட பிராந்தியக் கட்சிகளில், இந்த அறிக்கை வெளியாகும் வரை 33 கட்சிகள் தங்களது நிதி அறிக்கையைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவே இல்லை. ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு அசாம் கண பரிஷத் போன்ற பல முன்னணி கட்சிகள் இந்த அமைதியான பட்டியலில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
