இயற்கையின் விசித்திரமான உயிரினங்களில் ஒன்றான பாம்புகளைப் பற்றி மக்களிடையே பல்வேறு தகவல்களும் மூடநம்பிக்கைகளும் உலவி வருகின்றன. அதில் மிகவும் முக்கியமானது, பாம்பு தனது சட்டையை   உரிப்பது பற்றிய விஷயமாகும். பாம்புகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் தோலை கழற்றி எறிவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், அவை ஏன் தோலை உரிக்கின்றன, அந்தச் சமயத்தில் மனிதர்கள் அதைப் பார்த்தால் பழிவாங்குமா என்ற பயம் பலருக்கும் உண்டு. இதற்குப் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகளை இங்கு விரிவாகக் காண்போம்.

பாம்புகள் தங்கள் வாழ்நாளில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் தன்மையுடையவை. ஆனால், அவற்றின் வெளிப்புறச் சருமம்  உடலோடு சேர்ந்து நெகிழ்ந்து வளருவது இல்லை. இதனால், உடல் வளர்ச்சி அடையும் போது பழைய தோல் இறுக்கமாக மாறுகிறது. எனவே, பழைய தோலின்கீழ் புதிய தோல் உருவாகியவுடன், பழைய தோலை உரித்துவிட்டுப் புதிய தோலுடன் வெளிவருகின்றன. மேலும், வெளிப்புற தோலில் சேர்ந்துள்ள ஒட்டுண்ணிகள், கிருமிகள் மற்றும் நோய்த்தொற்றுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இந்த ‘தோல் உரித்தல்’  நிகழ்வு பாம்புகளுக்கு மிகவும் அவசியமாகிறது.

தோல் உரிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே பாம்புகளின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, அவற்றின் கண்கள் மங்கலான நீல நிறமாகவோ அல்லது பால் போன்ற வெள்ளை நிறமாகவோ மாறிவிடும். இந்தச் சமயத்தில் பாம்புகளுக்குக் கண் பார்வை மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால் அவை பாதுகாப்பற்ற உணர்வை அடைந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அமைதியான, மனித நடமாட்டம் இல்லாத பாறைகள், புதர்கள் அல்லது மரப்பட்டைகளின் இடுக்குகளில் ஒளிந்து கொள்கின்றன. பின் சொரசொரப்பான இடங்களில் உடலைத் தேய்த்துப் பழைய தோலை உரித்து வெளியேறுகின்றன.

பாம்பு தோல் உரிக்கும் போது மனிதர்கள் அதைப் பார்த்தால், அது மனிதர்களை அடையாளம் வைத்துப் பழிவாங்கும் என்பது முற்றிலும் தவறான மூடநம்பிக்கையாகும். உண்மையில், பார்வை மங்கலாக இருப்பதால் அந்தச் சமயத்தில் பாம்புகள் மிகவும் பயந்த சுபாவத்துடனும், பதற்றத்துடனும் இருக்கும். தற்காப்பிற்காக மட்டுமே அவை சீறவோ அல்லது கடிக்கவோ முயலுமே தவிர, மனிதர்களைப் பழிவாங்கும் நினைவாற்றலோ அல்லது எண்ணமோ பாம்புகளுக்குக் கிடையாது. எனவே, பாம்பு தோல் உரிப்பதைப் பார்த்தால் ஆபத்து என்ற பயம் தேவையில்லை; அதே சமயம், அது பதற்றத்தில் இருக்கும் என்பதால் அதைத் தொந்தரவு செய்யாமல் கடந்து செல்வதே பாதுகாப்பானது.