கோடை காலத்தின் வெப்பத்தைத் தணிப்பதாகட்டும் அல்லது உணவுக்குப் பிறகு நாவில் இனிப்பைச் சேர்ப்பதாகட்டும், ‘குல்ஃபி ஐஸ்கிரீம்’ என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஒரு தனிப் பிரியம் உண்டு. கடைகளில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களை விட, வீட்டிலேயே சுத்தமாகவும் சுவையாகவும் செய்யப்படும் பாரம்பரிய குல்ஃபிக்கு ஈடு இணையே இல்லை. மிகக் குறைந்த பொருட்களைக் கொண்டு, கடைகளில் கிடைப்பது போன்றே கிரீமியாகவும் நாவில் கரையும் சுவையிலும் இந்த குல்ஃபியை எளிதாகச் செய்துவிடலாம்.

இந்த சுவையான குல்ஃபி ஐஸ்கிரீம் செய்யத் தேவையான பொருட்கள்: 200 மில்லி கண்டென்ஸ்டு மில்க், 2 கப் விப்பிங் கிரீம் , 2 கப் நறுக்கிய/அரைத்த பிஸ்தா, 2 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ், 2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் மற்றும் 2 சிட்டிகை குங்குமப்பூ.

செய்முறைக்கு முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் குங்குமப்பூவை வெதுவெதுப்பான நீரில் போட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும். கண்டென்ஸ்டு மில்க்கை முன்கூட்டியே பிரிட்ஜில் வைத்து நன்றாகக் குளிரவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் குளிர்ந்த விப்பிங் கிரீமைச் சேர்த்து, மிதமான வேகத்தில் நுரை வரும் வரை அடித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் குளிர்ந்த கண்டென்ஸ்டு மில்க் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து, மீண்டும் வேகத்தைக் கூட்டி கிரீமி பதம் வரும் வரை அடித்துக் கொண்டால் ஐஸ்கிரீம் பேஸ் தயாராகிவிடும்.

இப்போது தயாரான ஐஸ்கிரீம் பேஸில் அரைத்த பிஸ்தா, ஏலக்காய்த்தூள் மற்றும் ஊறவைத்த குங்குமப்பூ கரைசலைச் சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் ஒன்றாகச் சீராகக் கலக்கும்படி மிதமான வேகத்தில் மிக்ஸியில் ஒருமுறை அரைத்து எடுக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை ஒரு பாத்திரத்திலோ அல்லது குல்ஃபி மோல்டிலோ மாற்றி, குறைந்தபட்சம் 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைத்து உறைய விட்டால், ஜில்லென்ற சுவையான ‘ஹோம்மேட் குல்ஃபி ஐஸ்கிரீம்’ தயார்!