இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு இடையே உள்ள அப்பட்டமான வித்தியாசங்களை தம்பதி ஒன்று தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளனர். இந்தியாவின் மேற்கு வங்க எல்லையான ஜெய்கான் பகுதியையும், பூட்டானின் புவென்ஷோலிங் எல்லையையும் ஒப்பிட்டு இந்த வீடியோ தத்ரூபமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்தியப் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள், குப்பைகள் அள்ளி வீசப்பட்ட தெருக்கள், விதிமுறைகளை மதிக்காமல் தாறுமாறாக ஓடும் வாகனங்கள், மற்றும் காதைப் பிளக்கும் தேவையற்ற ஹார்ன் சத்தங்கள் என ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருப்பதாக அந்தத் தம்பதி ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“>

ஆனால், அப்படியே எல்லைக் கோட்டைத் தாண்டி பூட்டான் பகுதிக்குள் நுழைந்ததும், ஒட்டுமொத்த சூழலே தலைகீழாக மாறி, அமைதியான சாலைகள், சுத்தமான தெருக்கள், ஒழுங்கான போக்குவரத்து மற்றும் துளிக்கூட ஒலி மாசு இல்லாத சொர்க்கமாக காட்சி அளிப்பதாக விவரித்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, ஒட்டுமொத்த இணையவாசிகளுக்கு இடையே ஒரு மிகப்பெரிய விவாதப் போரையே கிளப்பியுள்ளது. வீடியோவை பார்த்த ஒரு தரப்பினர், “இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி பூட்டானை விட எவ்வளவோ சிறப்பாக இருந்தாலும், நம் நாட்டு மக்களிடம் பொது ஒழுக்கமும் தூய்மைப் பராமரிப்பும் அடியோடு இல்லாமல் போனது சாபக்கேடு” என்று தம்பதியின் கருத்தை வழிமொழிந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிலர் ஒருபடி மேலே போய், “நம் மக்கள் மாறவே மாட்டார்கள், இந்தியா இனி திருத்தவே முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது” என்று கடுமையான விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். மறுபுறம், இந்த வீடியோவிற்கு இந்திய நெட்டிசன்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்புகளும், ஆக்ரோஷமான பதிலடிகளும் கிளம்பியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் வெறும் வியூஸ் மற்றும் லைக்குகளை அள்ளுவதற்காக மட்டுமே இந்தியாவின் எதிர்மறையான பக்கங்களை திட்டமிட்டுப் பெரிதாக்கிக் காட்டியிருப்பதாக நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.  இந்தியா போன்ற நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஒரு மாபெரும் நாட்டில் சில குறைபாடுகள் இருப்பது இயல்புதான் என்றும், அதற்காக ஒட்டுமொத்த தேசத்தையும் கேவலப்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் ஆவேசமாக வாதிட்டுள்ளனர்.

இந்நிலையில் வெறும் போனில் வீடியோ எடுத்து குறை சொல்வதை நிறுத்திவிட்டு, நாட்டை மாற்ற உங்களது பங்களிப்பு என்ன என்ற கேள்விகளும் அங்கே எழுப்பப்பட்டு வருகின்றன.