உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், ஆற்றங்கரையில் சிறுவன் ஒருவன் முதலையிடம் சிக்கிப் பலியான சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மரோவா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சுனில் சிங், தனது சித்தப்பாவுடன் வயல்வெளி வேலைகளை முடித்துவிட்டு, அருகில் உள்ள ஆற்றங்கரையில் கை, கால்களைக் கழுவிக்கொண்டிருந்தான்.
அப்போது, எதிர்பாராதவிதமாக ஆற்றிலிருந்து வெளியேறிய ராட்சத முதலை ஒன்று, சிறுவனைத் திடீரெனத் தாக்கி தனது வாயால் கவ்விக்கொண்டு ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அவனது சித்தப்பாவும், அருகில் இருந்த கிராம மக்களும் கற்களை வீசியும், சத்தமிட்டும் முதலையை விரட்ட முயன்றனர். ஆனால், முதலையின் பிடியிலிருந்து சிறுவனை மீட்க முடியாமல் போனது.
ஆக்ரோஷமான அந்த முதலை, சிறுவனை ஆற்றுக்குள் பலமுறை அமிழ்த்தி கொன்றுவிட்டு நீருக்குள் மறைந்தது. இதனையடுத்து, கிராம மக்கள் சுமார் ஐந்து மணி நேரம் மூங்கில் மற்றும் டார்ச் விளக்குகளுடன் நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சில நூறு மீட்டர் தொலைவில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. முதலையின் கொடூரத் தாக்குதலில் சிறுவனின் உடல் சிதைந்திருந்தது.
பெற்றோரை இழந்த அந்தச் சிறுவன், தனது சித்தப்பாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தான். தற்போது இந்தத் துயரச் சம்பவத்தால் அக்கிராமமே கண்ணீரில் மூழ்கியுள்ளது.
ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், இது போன்ற சம்பவங்களைத் தடுக்க வனத்துறையும் மாவட்ட நிர்வாகமும் ஆற்றங்கரையோர கிராமங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
