உலகளாவிய வாகனத் தயாரிப்புத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஃபோக்ஸ்வேகன், தற்போது மிகப்பெரிய பணிநீக்கப் புயலில் சிக்கியுள்ளது. அந்நிறுவனம் தனது ஜெர்மனி தொழிற்சாலைகளை மூடத் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் விளைவாக சுமார் 1,40,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள், பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு, அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஆலிவர் புளூமை நேரடியாக எதிர்கொள்ள ஊழியர்கள் தயாராகி வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வொல்ஃப்ஸ்பர்க், எம்டன் மற்றும் ஸ்விகாவ் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் சிறப்பு ஊழியர் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளை மூடும் முடிவானது, ஊழியர்களின் எதிர்காலத்தைச் சிதைப்பதாகத் தொழிற்சங்கங்கள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளன. மின்சார வாகனங்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு, சீன நிறுவனங்களுடனான கடுமையான போட்டி மற்றும் சர்வதேச வர்த்தகக் கட்டுப்பாடுகள் ஆகியவை இந்த இக்கட்டான சூழலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

சுமார் 1,00,000-க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் இத்திட்டம், வாகனத் தயாரிப்பு வரலாற்றிலேயே மிகப்பெரிய மறுசீரமைப்பாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தொழிற்சாலைகளை மூடாமல் “சிறந்த மாற்றுகளை” உருவாக்க முடியும் என்று சி.இ.ஓ புளூம் உறுதியளித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தச் செய்தி பணியாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தகவல்கள் கசிந்தது குறித்துப் பேசிய புளூம், அதிகாரப்பூர்வமற்ற கசிவுகள் நிறுவனத்தின் நற்பெயருக்கும் ஊழியர்களின் மனநலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பணிநீக்கங்கள் மற்றும் தொழிற்சாலை மூடல் குறித்த அதிகாரப்பூர்வமான விளக்கத்தை சி.இ.ஓ-விடமிருந்து பெற ஊழியர்கள் ஆக்ரோஷமாகத் தயாராகி வருகின்றனர்.