கேரளாவில் தாயுடன் சாலையோரம் விளையாடியபடியே நடந்து சென்ற சிறு குழந்தை ஒன்று, எதிர்பாராத விதமாகத் திடீரெனச் சாலையின் நடுவே பாய்ந்து இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகக் குழந்தைகளைச் சாலைகளுக்கு அழைத்துச் செல்லும்போது பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் உள்ள முக்கியச் சாலை ஒன்றின் ஓரமாகத் தாய் ஒருவர் தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்தச் சிறு குழந்தை மிகவும் குதூகலத்துடன், ஆடிக்கொண்டும் துள்ளிக் குதித்துக்கொண்டும் ஜாலியாக நடந்து சென்றுள்ளது.அப்படி ஆடிக்கொண்டே சென்ற குழந்தை, விளையாட்டின் போக்கில் திடீரெனத் தனது தாயின் பிடியில் இருந்து விலகி, சாலையின் குறுக்கே ஓடியுள்ளது.
அப்போது அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்த பைக் மற்றும் ஸ்கூட்டரின் முன்னால் எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தை நிலைதடுமாறி விழுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் வந்த இருசக்கர வாகனம் அந்தக் குழந்தையின் மீது பலமாக மோதியதில், குழந்தை தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தது.
https://x.com/i/status/2078038656296849746
இதைக் கண்டு பதறிப்போன அந்தத் தாய் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாகக் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சாலையோரங்களில் செல்லும்போது குழந்தைகளைக் கையின் பிடி தளராமல் வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த விபத்து வீடியோ தற்சமயம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
