குருகிராமில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், மஹிந்திரா தார் காரை ஓட்டி வந்த பெண் ஒருவர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த 57 வயதான வீட்டுப் பணிப்பெண்ணான குட்டி என்பவர் மீது காரை ஏற்றியுள்ளார். இந்த கோர விபத்தில் அந்தப் பெண் பலத்த காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய அந்த ஓட்டுநர், உடனடியாக காயமடைந்த பெண்ணை மற்றொரு வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

ஆனால், மருத்துவமனையில் அந்தப் பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பணிப்பெண் இறந்துவிட்டதை அறிந்த அந்த ஓட்டுநர், மருத்துவமனையிலிருந்து உடலைத் திரும்ப எடுத்துக் கொண்டு விபத்து நடந்த அதே குடியிருப்பு வளாகத்திற்கு வந்துள்ளார்.

“>

மேலும், யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், விபத்து நடந்த அதே பார்க்கிங் பகுதியிலேயே அந்தப் பெண்ணின் சடலத்தை மீண்டும் போட்டுவிட்டுச் சென்றுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இறந்த பெண்ணின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் செக்டர் 65 காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த மனிதாபிமானமற்ற செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ஓட்டுநரின் வீட்டின் முன்பு மக்கள் திரண்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். தற்போது விபத்து ஏற்படுத்திய பெண்ணிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.