குழந்தை பருவத்தின் மிக அழகிய விஷயமே, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பெரிய அளவில் எதுவும் தேவையில்லை என்பதுதான். எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ, பொறுப்புகளின் சுமையோ இன்றி, தங்களின் கற்பனை உலகிலேயே பேரானந்தத்தைக் கண்டறிவதில் குழந்தைகள் எப்போதும் கில்லாடிகள். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகி, லட்சக்கணக்கானோரின் இதயங்களை வென்று வரும் சிறுவர்களின் வீடியோ ஒன்று, பலரையும் தங்களது சிறுவயது நினைவுகளில் மூழ்கடித்து வைரலாகி வருகிறது.
வைரலாகும் அந்த வீடியோவின் தொடக்கத்தில், ஒரு சிறிய சிறுவன் வீட்டு வாசலில் மிகவும் நிதானமாகப் படுத்துக் கொண்டு, ஸ்ட்ரா மூலம் கூல் டிரிங்க்ஸ் குடித்து சொகுசாக என்ஜாய் செய்வது போல் காட்டப்படுகிறது. ஆரம்பத்தில் இது சாதாரண ஒன்றாகத் தெரிந்தாலும், கேமரா சற்று நகர்ந்து சுற்றியுள்ள காட்சிகளைக் காட்டும்போதுதான் அங்கே ஒரு சுவாரசியமான ட்விஸ்ட் அரங்கேறுகிறது.
View this post on Instagram
அந்தச் சிறுவனுக்கு அப்படியே கடற்கரையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு உணர்வைத் தருவதற்காக, அவனது நண்பன் அருகில் நின்றுகொண்டு அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறான். அவன் படுத்திருக்கும் இடத்தை சுற்றிலும் தண்ணீரை ஊற்றி, சோப்பு நுரைகளை அள்ளித் தெளித்து, நிஜமாகவே ஏதோ ஒரு கடல் அலை வந்து போவது போன்ற ஒரு தத்ரூபமான சூழலை தன் கைகளால் உருவாக்கியுள்ளான். படுத்திருக்கும் சிறுவனும் தன் நண்பனின் இந்த அன்பான முயற்சியை உணர்ந்து, முகத்தில் புன்னகையோடு ஒரு பெரும் கோடீஸ்வரன் மாலத்தீவில் உல்லாசமாக இருப்பது போல பாவனை செய்கிறான். இரு சிறுவர்களின் இந்த அநட்பும், அவர்களின் கற்பனைத் திறனும் பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில், விடுமுறையைக் கொண்டாடுவதற்கு மக்கள் லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்து கோவா, மாலத்தீவு எனத் திட்டமிட்டு வரும் வேளையில், இந்தச் சிறுவர்கள் பைசா செலவில்லாமல் தங்களது மகிழ்ச்சிக்கான ஒரு குட்டி உலகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @lalaouna_walid34 என்ற கணக்கில் பகிரப்பட்டு இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த பயனர் ஒருவர், “இந்த சிறுவனின் கெத்தைப் பார்த்தால் மாலத்தீவு போக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கூட அதை கேன்சல் செய்துவிடுவார்கள்!” என வேடிக்கையாகப் பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ, “நண்பன் இருந்தால் நரகத்தையும் சொர்க்கமாக்கலாம் என்பதற்கு இவர்களே சாட்சி” என நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்துள்ளார்.
