அமெரிக்காவில் பணிபுரியும் புனேவைச் சேர்ந்த யுவன் இபானெஸ் கார்வேர் என்பவர், அந்நாட்டின் மருத்துவக் கட்டணம் மற்றும் சுகாதார அமைப்பு முறை குறித்த தனது கசப்பான அனுபவத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு மயங்கி விழுந்தபோது, ஆவணங்கள் எதையும் பார்க்காமல் உடனடியாகத் தனி அறை ஒதுக்கப்பட்டுச் சோதனைகள் நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். அங்கு முழுச் சிகிச்சைக்கும் வெறும் 500 டாலர் (சுமார் ₹47,000) மட்டுமே செலவானது.
ஆனால், அமெரிக்காவில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டபோது ஆம்புலன்ஸ் கட்டணம் அதிகம் என்பதால் அவரே காரை ஓட்டி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு ஆவண நடைமுறைகளுக்காக ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டியிருந்தது.
சிகிச்சைக்குப் பின் மருத்துவமனைக் கட்டணமாக 23,000 டாலர் (சுமார் ₹22 லட்சம்) கேட்கப்பட்டது. அவரிடம் மருத்துவக் காப்பீடு இருந்தபோதிலும், 7,000 டாலரை (சுமார் ₹6.67 லட்சம்) தனது சொந்தப் பணத்தில் இருந்து செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
அமெரிக்காவில் உள்கட்டமைப்பு நன்றாக இருந்தாலும், சுகாதார அமைப்பு மிகவும் மெதுவாகவும் செலவுமிக்கதாகவும் இருப்பதாகக் கூறியுள்ள அவர், இதனால் அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கே திரும்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
