மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், திரைப்பட பாணியில் காலணியின் உள்ளே அலைபேசியை நுட்பமாக மறைத்து வைத்து தேர்வு எழுத முயன்ற ‘முன்னாபாய்’ பாணி மோசடி இளைஞர் ஒருவர், அதிகாரிகளின் அதிரடி சோதனையில் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கப் பறக்கும் படைகளும் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் வேளையில், இந்த இளைஞர் கையாண்ட புதுமையான குறுக்கு வழித் திட்டம் அங்கிருந்த அதிகாரிகளையே சில நொடிகள் திகைக்க வைத்துள்ளது.
தேர்வு மையத்திற்குள் நுழையும்போதே அந்த இளைஞரின் நடையிலும், காலணியின் அமைப்பிலும் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரைத் தனியாக அழைத்துச் சென்று தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்பொழுது, அவர் அணிந்திருந்த காலணியின் சோல் பகுதியை மிகவும் நேர்த்தியாக வெட்டி, அதற்குள் செல்போனை மறைத்து வைத்து, புளூடூத் போன்ற நவீன சாதனங்கள் மூலம் தேர்வு அறையில் முறைகேடு செய்யத் திட்டமிட்டது அம்பலமானது.
சினிமா பாணியில் மிகச் கச்சிதமாகத் திட்டமிட்டுத் தேர்வு மையத்திற்குள் நுழைய முயன்ற அவரது தந்திரம், கண்காணிப்பாளர்களின் கூர்மையான பார்வையால் நொடியில் தவிடுபொடியானது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மோசடி நபரை உடனடியாகத் தேர்வெழுதத் தடை செய்த அதிகாரிகள், அவரைக் காவல்துறையிடம் ஒப்படைத்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நேர்மையாகப் படித்துத் தேர்வு எழுதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில், இதுபோன்ற நவீனத் தொழில்நுட்ப முறைகேடுகளில் ஈடுபடும் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.
இந்நிலையில் நாசிக்கில் நடந்த இந்த ‘முன்னாபாய்’ பாணி சம்பவம், தற்போது தேர்வுத் துறை வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
