மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் காவல்துறை அதிகாரி ஒருவர், கணவரின் கொடுமை தாங்காமல் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு இவர் தனது கணவருடன் டோம்பிவ்லி மேற்குப் பகுதியில் வசித்து வந்தார்.
காவல்துறையில் பணியாற்றி வந்த போதிலும், அப்பெண்ணின் கணவர் ‘நீ கருப்பாக இருக்கிறாய், உன்னைப் பிடிக்கவில்லை’ என்றும், சாதியைக் குறித்தும் தொடர்ந்து இழிவாகப் பேசி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்துள்ளார்.
மேலும், மனைவியின் குணநலன்கள் மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுத் தாக்குதலும் நடத்தியுள்ளார். வீட்டுச் செலவுகள் மற்றும் பொருட்கள் வாங்குவது தொடர்பாக இருவருக்கும் இடையே தினமும் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
கணவரின் தொடர்ச்சியான மன உளைச்சல் மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல் காரணமாகவே அப்பெண் இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் விஷ்ணுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த பெண் அதிகாரியின் கணவரைக் கைது செய்துள்ளனர். மேலும், இக்கொடுமைக்குக் காரணமான மாமியார் குடும்பத்தினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
