தகவல் தொழில்நுட்ப மையமான புனேவின் ஒரு பகுதியில், காதலனுடன் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து 23 வயதான மென்பொருள் பொறியாளர் பெண் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கராடி காவல்துறையினர் தலைமறைவான காதலனைக் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண் பீகாரைச் சேர்ந்த ஜான்வி பதக் (23) என்றும், நொய்டாவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் டெல்லியைச் சேர்ந்த அம்ரித் குமார் (23) என்பவரே கைது செய்யப்பட்ட காதலன் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் மாமா அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும் உயர்கல்விக்குப் பிறகு வேலைக்காக வெவ்வேறு நகரங்களுக்குச் சென்றனர். ஜான்வி ராஜஸ்தானில் பொறியியல் முடித்துவிட்டு, கடந்த இரண்டு மாதங்களாகப் புனே கராடி பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று நொய்டாவில் இருந்து புனே வந்த அம்ரித் குமார், ஜான்வியின் அறையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடும் வாக்குவாதமும் சண்டையும் நடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை மதியம் அம்ரித் குமார் வெளியே சென்றிருந்த நேரத்தில், மனமுடைந்த ஜான்வி அறையின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பிரேத பரிசோதனைக்காக உடல் சசூன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
