விலங்குகளின் சுட்டித்தனமான மற்றும் விசித்திரமான வீடியோக்கள் இணையத்தில் நாள்தோறும் வைரலாவது வழக்கம் தான். ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வரும் வெறும் 11 நொடிகள் கொண்ட ஒரு வீடியோ, பார்ப்பவர்களைத் தங்களது சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்து இணையத்தையே அதிரச் செய்து வருகிறது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், நாய் ஒன்று ஒரு காலை நொண்டியபடி மிகவும் பரிதாபமாக நடந்து வருகிறது. அங்குள்ள ஒரு உணவகத்தில் மேஜையில் அமர்ந்து சிலர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த அந்த நாய், அவர்களிடம் தத்தித் தத்திச் சென்று பசியோடு நிற்கிறது. அதன் காலில் பலத்த காயம் ஏற்பட்டு நொண்டுகிறது என்று நினைத்த அங்கிருந்த ஒரு நபர், பாவம் எனப் பரிதாபப்பட்டு, தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவிலிருந்து ஒரு பகுதியை அந்த நாய்க்குப் போடுகிறார்.

 

உணவு தரையில் விழுந்த அடுத்த கணமே, அங்கிருந்தவர்கள் அனைவரும் வாயடைத்துப் போகும் ஒரு ட்விஸ்ட் அரங்கேறியது! அதுவரை ஒரு காலைத் தூக்கிக் கொண்டு நொண்டியபடி அழுது வடிந்த அந்த நாய், உணவு கிடைத்த அடுத்த நொடியே, எவ்வித வலியும் இல்லாதது போல் தனது நான்கு கால்களையும் தரையில் ஊன்றி, உணவைக் கவ்விக்கொண்டு அசுர வேகத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. சாப்பாடு வாங்குவதற்காகவே அந்த நாய் இவ்வளவு நேரம் செம்ம கச்சிதமாக நொண்டியபடி ‘ஆஸ்கார்’ லெவலுக்கு நடித்துள்ளது என்பதைப் பார்த்த நெட்டிசன்கள் வியந்து போயுள்ளனர்.

இந்த வீடியோ எக்ஸ்  தளத்தில் @Im_Angel_77 என்ற கணக்கில், “இது ஆஸ்கார் விருது வாங்கும் அளவிற்கான நடிப்பு!” என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்டு, லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது. இது உண்மையான வீடியோவா அல்லது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்று விவாதங்கள் எழுந்தாலும், நெட்டிசன்கள் வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.