அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கடற்படைப் பயிற்சித் திட்டமான ‘என்.ஜே.ஆர்.ஓ.டி.சி’  பிரிவில், சுமார் 300 அமெரிக்கக் கேடட்களை   வழிநடத்தும் மிக உயரிய ‘பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர்’ பதவியை 17 வயதேயான ரித்தி சவுகான் என்ற இந்திய வம்சாவளி மாணவி பெற்றுள்ளார். நியூயார்க்கின் குவீன்ஸ் பகுதியில் உள்ள பெஞ்சமின் என். கார்டோசோ உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் ரித்தி, இந்த அமைப்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பொறுப்பை எட்டி ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தினமும் அதிகாலை 7 மணிக்கு முன்பாகவே பள்ளிக்குச் சென்று, வாரத்தில் நான்கு நாட்கள் மற்ற மாணவர்களுக்குக் கடுமையான அணிவகுப்புப் பயிற்சிகளை ரித்தி வழங்கி வருகிறார். கேடட்களின் பயிற்சி, நலன் மற்றும் பட்டாலியன் செயல்பாடுகளைத் திட்டமிட்டு நிர்வகிப்பது இவருடைய முக்கியப் பொறுப்பாகும். அமெரிக்கக் கடற்படையின் ஆதரவுடன் நடத்தப்படும் இந்தத் திட்டத்தில் இணைந்து, தனது தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொண்ட ரித்தி, தற்போது 200-க்கும் மேற்பட்ட இளநிலை கேடட்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

ரித்தி சவுகான் இந்தப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பாக, அகாடமிக் கமாண்டர், ஸ்டெம்  கமாண்டர் போன்ற பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகச் செயலாற்றியுள்ளார். இவரது தலைமையின் கீழ், தேசிய அளவிலான கல்விப் போட்டிகளில் இவரது பள்ளி அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. மேலும், ‘ஸ்டெம்’ கமாண்டராக இருந்தபோது, கேடட்களை ஒருங்கிணைத்து நீருக்கு அடியில் இயங்கும் ‘சீபெர்ச்’  என்ற ரோபோவை புதிதாக உருவாக்கித் தனது பன்முகத் திறமையை நிரூபித்துள்ளார்.