அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பென்சகோலா கடற்கரை கடந்த சில தினங்களாகவே சுற்றுலாப் பயணிகளின் வருகையால் களைகட்டியிருந்தது. அங்கு புகழ்பெற்ற அமெரிக்க கடற்படையின் ‘புளூ ஏஞ்சல்ஸ்’ குழுவினர் நடத்தவிருந்த ஏர் ஷோவிற்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் குடும்பங்களுடன் கடற்கரையில் குடைகள் மற்றும் தற்காலிகக் கூடாரங்களை அமைத்து, இந்த வான்வழி சாகசத்தைக் காண ஆவலோடு காத்திருந்தனர். அப்போதுதான் அந்த அதிரடிச் சம்பவம் அரங்கேறியது.

“>

யாரும் எதிர்பாராத விதமாக, திடீரென வானைப் பிளக்கும் பயங்கர சத்தத்துடன் எஃப்/ஏ-18 சூப்பர் ஹார்னெட் ரக போர் விமானம் ஒன்று, கடற்கரையில் மக்கள் கூடியிருந்த பகுதிக்கு மிக மிக அருகில், அசுர வேகத்தில் தாழ்வாகப் பறந்து வந்தது. அந்த விமானம் வழக்கமான பாதுகாப்பு உயரத்தை விட மிகக் குறைவாகப் பறந்ததால், அதிலிருந்து வெளிப்பட்ட அதீத காற்றழுத்தம் மற்றும் சூறாவளி போன்ற வேகம், ஒட்டுமொத்த கடற்கரையையும் ஒரு நொடியில் தலைகீழாக மாற்றியது.

சுற்றுலாப் பயணிகள் நடத்தவிருந்த பிரம்மாண்ட குடைகள், தற்காலிக கூடாரங்கள், நாற்காலிகள் மற்றும் உடமைகள் அனைத்தும் காற்றில் பஞ்சாகப் பறந்து நாலாபுறமும் சிதறின. என்ன நடக்கிறது என்று தெரியாமல் மக்கள் அலறியடித்துக் கொண்டு தங்களின் பொருட்களைப் பிடிக்க ஓடிய காட்சிகள் பார்ப்போரைக் திகைக்க வைக்கிறது.

இந்த ஒட்டுமொத்த பதைபதைப்பான காட்சிகளும் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, மில்லியன் கணக்கான பார்வைகளுடன் உலகளவில் பரவி வருகிறது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் நிம்மதி பெருமூச்சுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, அந்த போர் விமானம் ஏன் அவ்வளவு ஆபத்தான முறையில் தாழ்வாகப் பறந்தது என்பது குறித்து புளூ ஏஞ்சல்ஸ் குழுவின் தலைமை அதிகாரிகள் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் இணைந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடற்படையின் மிக உயரிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.