அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு நிகழ்ந்த மிக மோசமான தொடர் வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழக்கக் காரணமான இந்திய வம்சாவளி லாரி ஓட்டுநருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சுமார் 5 ஆண்டுகள் (4 ஆண்டுகள் 8 மாதங்கள்) சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஜஷன்பிரீத் சிங் (21) என்ற அந்த இளைஞர், தன் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு அக்டோபர் 21 அன்று, கலிபோர்னியாவின் ஆன்டாரியோ பகுதியில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில்  ஜஷன்பிரீத் சிங் அதிவேகமாக லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது முன்னால் சென்ற வாகனங்கள் மெதுவாகச் சென்றபோதும், அவர் தனது லாரியின் பிரேக்கைப் பயன்படுத்தாமல் நேராக மோதியுள்ளார். இதனால் அடுத்தடுத்து 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உடல் கருகி பலியாகினர், மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து நடந்தவுடன் ஜஷன்பிரீத் சிங் போதையில் லாரியை ஓட்டியதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அவர் மதுவோ அல்லது போதைப்பொருட்களோ உட்கொள்ளவில்லை என்பது உறுதியானது. எனினும், கவனக்குறைவாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனத்தை இயக்கி மரணத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவரது வயது மற்றும் இதற்கு முன் எவ்வித குற்றப்பின்னணியும் இல்லாததைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த தண்டனைக் காலத்தைக் குறைத்து வழங்கியுள்ளது.