சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்த ஷீலாமேரி, தங்கக் காசுகள் தருவதாகக் கூறி சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் நிதி மோசடி செய்த வழக்கில்  போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக திருவொற்றியூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர் பணியாற்றியபோது, தனது வாகன ஓட்டுநரான பிரபுமணி என்பவருடன் இணைந்து ‘விநாயக என்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் முதலீட்டுத் திட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இதில் சந்தை விலையைவிடக் குறைந்த விலைக்கு தங்கக் காசுகள் வழங்குவதாகவும், முதலீடு செய்வோருக்கு மாதாந்திர லாபம் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பி ஒரு வங்கியின் கிளை மேலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், காவலர்கள், அவர்களின் குடும்பத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கோடிக்கணக்கான ரூபாயை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். தொடக்கத்தில் முதலீட்டாளர்களுக்குக் குறைந்த விலையில் தங்கக் காசுகளை வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்திய இந்த கும்பல், அதன் பிறகு சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துவிட்டு, சொன்னபடி தங்கக் காசுகளையோ அல்லது முதலீடு செய்த பணத்தையோ திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளது. பாதிக்கப்பட்ட வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் ஓட்டுநர் பிரபுமணி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பெண் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி  பணியிடை நீக்கம்  செய்யப்பட்டார். இந்நிலையில், முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் ஷீலாமேரியை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.