அரசு மருத்துவமனைகளில் நிலவி வரும் லஞ்சப் புகார்கள் குறித்து அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் மிகவும் எதார்த்தமான, அதிரடி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்து குழந்தை பிறக்கும்போது, பெற்றெடுத்த அந்தப் பிஞ்சுக் குழந்தையை உறவினர்களிடம் காண்பிப்பதற்குக் கூட ஊழியர்கள் கட்டாயப் பணம் வாங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

“அரசு மருத்துவமனைகளில் பணம் வாங்குவது உண்மைதான், அந்தப் புகாரை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்த அவர், இத்தகைய முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த அரசு தரப்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் உள்ள எந்தவொரு அரசு மருத்துவமனையாக இருந்தாலும் சரி, அங்குள்ள ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டாலோ அல்லது பணம் தருமாறு பொதுமக்களை வற்புறுத்தினாலோ, உடனடியாக 104 என்ற உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சரின் இந்த வெளிப்படையான ஒப்புதல் மற்றும் புதிய புகார் எண் அறிவிப்பு தற்போது பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.