துருக்கி நாடு எல்ஜிபிடிகியூ+ சமூகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பயணித்த ஒரு ஆடம்பர சொகுசு கப்பலைத் தனது நாட்டின் இரண்டு முக்கிய துறைமுகங்களில் நிறுத்த அனுமதி மறுத்துள்ளது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பயண நிறுவனம், ஏதென்ஸ் முதல் வெனிஸ் வரை 10 நாட்கள் பயணமாக இந்த சொகுசு கப்பல் சுற்றுலாவை ஏற்பாடு செய்தது. இந்த கப்பலில் பெரும்பாலும் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 1,900 பயணிகள் இருந்தனர். அவர்கள் துருக்கியின் குஷாதாசி மற்றும் இஸ்தான்புல் ஆகிய நகரங்களின் துறைமுகங்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், துருக்கி அரசு இதற்குத் தடை விதித்துள்ளது.

இந்தத் தடைக்குத் தங்களது சமூகக் கட்டமைப்பு மற்றும் ஒழுக்க விழுமியங்களுக்கு எதிராக இந்தக் குழுவின் நடத்தை இருப்பதாக துருக்கி அரசு கூறியுள்ளது. துருக்கி அரசின் இந்த அதிரடி முடிவால் சொகுசு கப்பலின் பயணம் நடுவழியிலேயே மாற்றப்பட்டு, தற்பொழுது எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோ மற்றும் கிரீஸ் நாட்டின் கிரெட் தீவை நோக்கித் திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்த தடை குறித்துப் பேசிய பயண நிறுவன அதிகாரிகள், எல்ஜிபிடிகியூ+ பயணிகள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு நாடு தங்களுக்கு அனுமதி மறுத்திருப்பது இது முதல் முறை என்றும், இந்த சுற்றுலாவில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை, வெறும் கலாச்சாரத்தை மதிக்கும் சுற்றுலாவும் தங்களது வருத்தத்தைத் தெரிவிக்கின்றன.

சமீப காலங்களாக துருக்கி அரசு எல்ஜிபிடிகியூ+ தொடர்பான பல நிகழ்ச்சிகள், பிரைட் பேரணிகளுக்கும் தடை விதிக்கப்படும் நிலையில், தற்போது சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுத்திருக்கும் சம்பவம் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.