சமூக வலைதளங்களில் தங்களது ரீல்ஸ் வீடியோக்களுக்கு அதிக லைக்குகளும், வியூஸ்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இளைஞர்கள் பலர் தங்களின் உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாமல் ஆபத்தான ஸ்டண்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான்  உத்தரபிரதேச மாநிலம் அச்சல்தா பகுதியில் நடந்துள்ளது. அங்கு மிட்டாய் கடை நடத்தி வரும் 40 வயதான ரிங்கு என்பவர், வியாழக்கிழமை மதியம் தனது கடை வீதி வழியே சென்ற ஒரு மாந்திரீகனிடம் இருந்த விஷப் பாம்பைப் பார்த்துள்ளார். உடனே, தனது ரீல்ஸ் வீடியோ வைரலாக வேண்டும் என்ற விபரீத ஆசையில், அந்தப் பாம்பை வாங்கித் தனது கழுத்தில் சுற்றிக்கொண்டு விளையாடத் தொடங்கியுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் இதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அந்த விஷப் பாம்பு ரிங்குவின் கையில் பலமாகக் கடித்ததுடன், கடித்த இடத்திலிருந்து ரத்தமும் கொட்டத் தொடங்கியது. ஆனால், ஆரம்பத்தில் இதனை சாதாரணமாக நினைத்த ரிங்கு, தனது கிராமத்து மொழியில் அந்த மாந்திரீகனிடம் “ஒன்றும் ஆகாது தானே?” என்று அலட்சியமாகக் கேட்டுள்ளார்.

பாம்பு கடித்த ஆரம்பத்தில் தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்பது போல் காட்டிக்கொள்ள முயன்ற ரிங்குவிற்கு, அடுத்த சில நிமிடங்களிலேயே கடித்த கை பலமாக வீங்கி, கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்களும், அவரது உறவினர்களும் உடனடியாக ரிங்குவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு அவசர கால முதலுதவி சிகிச்சைகளும், பாம்பின் விஷ முறிவு மருந்தான ‘ஆன்டி-ஸ்நேக் வெனம்’ ஊசியும் செலுத்தப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இதுகுறித்து சிகிச்சை அளித்த மருத்துவர் கௌரவ் கூறுகையில், கிராம மக்கள் சரியான நேரத்தில் ரிங்குவை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால், விஷம் உடல் முழுவதும் பரவாமல் தடுக்கப்பட்டு, தற்போது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி உயிர் பிழைத்துள்ளதாகத் தெரிவித்தார். லைக்குகளுக்காக உயிரைப் பணயம் வைத்து ரிங்கு செய்த இந்த விபரீத ஸ்டண்ட், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.