தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று (ஜூலை 03) அதிமுக உட்கட்சி அரசியலில் ஒரு பேரிடி இறங்கியுள்ளது. அக்கட்சியின் முக்கியப் புள்ளியும், நட்சத்திரப் பேச்சாளருமான முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் திடீரென அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து ஒட்டுமொத்த ரத்தத்தின் ரத்தங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தேர்தல் களம், பிரச்சார மேடைகள் என அதிமுகவிற்காக எப்போதும் ஓடோடி உழைத்த ஒரு சீனியர் தலைவர், இன்று கட்சியை விட்டே வெளியேறியிருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

​தன்னுடைய விலகல் குறித்துப் பேசிய வைகைச்செல்வன், அதிமுக தலைமை மீதுள்ள அத்தனை குமுறல்களையும் கொட்டித் தீர்த்துள்ளார். “சரியான நேரத்தில் தவறான முடிவை எடுத்ததால் தான், வெற்றி பாதையில் இருந்து அதிமுக விலகிவிட்டது” என்று எடப்பாடியின் அரசியல் வியூகங்களை ஓப்பனாகவே சாடியுள்ளார். மேலும், தேர்தல் களத்தில் தான் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட, கட்சிக்காகத் ஓயாமல் உழைத்ததாகவும், ஆனால் மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு என்பதைத் தான் இப்போது முழுமையாக உணர்ந்து கொண்டதாகவும் மிக உருக்கமாகக் கூறியுள்ளார்.