ஒடிசா மாநிலப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் ஏற்பட்டுள்ள பெரும் குளறுபடிகள் காரணமாக அம்மாநிலக் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறிப்பாக, ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான ‘ஹம் தில் தே சுக்கே சனம்’ திரைப்படத்தின் புகழ்பெற்ற “நிம்பூடா நிம்பூடா” பாடலின் வரிகள் அச்சிடப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி தயாரிக்கப்பட்ட 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில், எழுத்துப் பிழைகள் மற்றும் அறிவியல் குளறுபடிகள் என 1,600-க்கும் மேற்பட்ட தவறுகள் இருப்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் கண்டறியப்பட்டது.

மேலும் அறிவியலாளர் சர் ஐசக் நியூட்டனை ஒரு “சிறந்த பைலட்” என்று குறிப்பிட்டது, கர்நாடக சட்டமன்றப் புகைப்படத்தை ஒடிசா சட்டமன்றம் எனத் தவறாக அச்சிட்டது, கோதுமையை நெல் என்று மாற்றிக் கூறியது எனப் பல அடுக்கடுக்கான வரலாற்று மற்றும் அறிவியல் பிழைகள் புத்தகங்களில் இடம் பெற்றிருந்தன.

இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியதை அடுத்து, ஒடிசா முதல்வர் மோகன் மாஜி தலைமையிலான அரசு இந்தத் தவறுகளுக்குக் காரணமான கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், பிழையுள்ள அனைத்துப் பழைய புத்தகங்களையும் மாணவர்களிடமிருந்து திரும்பப் பெறவும், திருத்தப்பட்ட புதிய புத்தகங்களை உடனடியாக அச்சிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.