மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில், விப்ரோ சர்க்கிள் அருகே நள்ளிரவில் அதிர்ச்சியூட்டும் ஹிட் அண்ட் ரன் விபத்து ஒன்று நடந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த விபத்தின் வீடியோ காட்சிகளின்படி, சாலையில் சென்றுகொண்டிருந்த மாருதி கார் ஒன்றை ஒரு இருசக்கர வாகன ஓட்டி தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளார்.

மேலும் ஒருகட்டத்தில் காரை நெருங்கிய இருசக்கர வாகன ஓட்டி, காரின் உள்ளே இருந்த ஒருவரை கைகளால் தாக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், இருசக்கர வாகனத்தின் மீது மிகக் கொடூரமாக காரை மோதியுள்ளார். இந்த பயங்கர மோதலில் இருசக்கர வாகன ஓட்டி தூக்கி வீசப்பட்டு, அங்கு நின்றுகொண்டிருந்த மற்றொரு காரின் மீது பலத்த வேகத்தில் மோதியுள்ளார்.

“>

இதில் அவருக்குத் தலையில் மிகக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய உடனடியாக, கார் ஓட்டுநர் தனது காரை நிறுத்தாமல் கேப்ஜெமினி நிறுவனப் பகுதியை நோக்கி அதிவேகமாக ஓட்டிச் சென்று அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த விபத்தில் தவறு யாருடையது என்பதில் பெரும் குழப்பமும் விவாதமும் எழுந்துள்ளது.

ஏனெனில் இருசக்கர வாகன ஓட்டி வேண்டுமென்றே காரை நெருங்கிச் சென்று சண்டையிடவும், காரில் இருந்தவர்களைத் தாக்கவும் முயன்றுள்ளார். அதே நேரத்தில் கார் ஓட்டுநரும் ஆத்திரத்தில் இருசக்கர வாகனத்தை வாகனத்தோடு சேர்த்துச் சக்கரம் அடியில் நசுக்கும் வகையில் கொடூரமாக மோதிவிட்டுத் தப்பியுள்ளார்.

இதனால் தற்போதைக்கு இதில் இருதரப்பு மீதும் தவறு இருப்பதாகத் தெரியும் நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியை விரைவில் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.