தமிழகத்தில் தவெக ஆட்சியைப் பிடித்த விவகாரம் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு சதி குறித்து, காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக மறைமுகமாக அதிமுகவோடு கூட்டணி வைத்து எப்படியாவது ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், ஆனால் அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் உடன்படவில்லை என்றும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இறுதியில் மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்கி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவெகவை ஆதரித்து ஆட்சியில் அமர வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ​மேலும் தற்போதைய தவெக ஆட்சியில், பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் திமுக கொள்ளையடித்த லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, வெளிப்படையான நிர்வாகம் நடைபெற்று வருவதாகக் கணபதி சிவகுமார் பாராட்டியுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில், தற்போதைய ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ரூ.35 கோடிக்கு பேரம் பேசும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதாகவும், இந்தச் சதிச் செயலில் ஈடுபடும் திமுகவை தமிழக மக்கள் வரும் காலங்களில் ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறியத் தயங்க மாட்டார்கள் என்றும் அவர் மிகக் காரசாரமாக எச்சரித்துள்ளார்.