உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியை தேனிலவு என்ற பெயரில் வியட்நாமுக்கு அழைத்துச் சென்று, அங்கு கூடுதல் வரதட்சணை கேட்டு பெல்ட்டால் அடித்துத் துன்புறுத்திய கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்தின் போது ஏற்கனவே கணிசமான தொகையை வரதட்சணையாக வழங்கியிருந்த போதிலும், கணவன் மற்றும் அவனது குடும்பத்தினர் கூடுதல் பணமும், சொகுசு காரும் கேட்டு அந்தப் பெண்ணை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.
இதன் உச்சக்கட்டமாக, வியட்நாம் சென்ற இடத்தில் மனைவியை மிகக் கொடூரமாகத் தாக்கி, அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், ஹோட்டல் அறையிலேயே அவரைத் தனியாகத் தவிக்கவிட்டுவிட்டு அந்த நபர் இந்தியாவுக்குத் தப்பி ஓடிவந்துள்ளார். ஹோட்டல் ஊழியர்களின் உதவியோடு மீட்கப்பட்ட அந்தப் பெண், பெரும் போராட்டத்திற்குப் பிறகு இந்தியா திரும்பியுள்ளார்.
இதனால் தன் மகளுக்கு நேர்ந்த இந்த கொடூரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர், இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். ஆரம்பத்தில் உள்ளூர் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கத் தாமதமானதை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீரட் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து முறையிட்டனர்.
இந்நிலையில் SSP-இன் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தற்போது அந்த கொடூரக் கணவன் மற்றும் அவனது குடும்பத்தினர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
