அதிக சம்பளம் தருவதாகக் கூறி, வேலை தேடும் 25 இளைஞர்களை மியான்மர்-தாய்லாந்து எல்லைப் பகுதியான ‘கோல்டன் ட்ரையாங்கிள்’ பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களைக் கடத்தல்காரர்கள் சிறைபிடித்துள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது மனைவிக்கு ரகசியமாக போன் செய்து அங்கு நடக்கும் கொடுமைகளை விவரித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
துப்பாக்கி முனையில் தினமும் 18 மணி நேரம் ஆன்லைன் மோசடி வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்படுவதாகவும், மறுத்தால் மின்சார ஷாக் கொடுத்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்துவதாகவும் அந்த இளைஞர் கதறியுள்ளார்.
அங்கு சுமார் 700 முதல் 800 இந்தியர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் கொல்லப்படுவதாகவும் அவர் கூறிய தகவல்கள் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை நம்பி 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் தாய்லாந்து சென்ற இளைஞர்கள், அங்கு கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். தங்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைப் பறித்துக்கொண்ட கும்பல், அவர்களை மியான்மர் எல்லைக்குக் கொண்டு சென்று அடைத்து வைத்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞரின் மனைவி அளித்த புகாரின் பேரில், பீட் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உதவியுடன் இளைஞர்களை மீட்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்று சிக்கியுள்ள இளைஞர்களை மீட்பதற்காக அரசு தரப்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
