தமிழக சட்டமன்றத்தில் த.வெ.க மற்றும் தி.மு.க உறுப்பினர்களுக்கிடையே “டாஸ்மாக் பார்ட்டி ஃபண்ட்” உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகக் காரசாரமான விவாதங்களும், கடுமையான அமளிகளும் ஏற்பட்டன. அவையில் அனல் பறந்த அந்தச் சூழலில், ஒட்டுமொத்த அவையையும் தன்வசப்படுத்திய முதலமைச்சர் விஜய், தனக்கே உரிய வழக்கமான ‘குட்டிக்கதை’ பாணியில் எதிர்க்கட்சியினருக்குப் பதிலடி கொடுத்தார். அதாவது ஒரு ஊர்ல ஒரு பெரிய காடு இருந்தது. அந்த காட்டுக்கு ஒரு புது சிங்கம் ராஜாவா வந்தது. அந்த சிங்கம் ரொம்ப அமைதியாவும், நிதானமாவும் காட்டைப் பராமரிச்சு வந்தது. இதைப் பார்த்த சில பழைய மிருகங்களுக்கு இது பிடிக்கல. அந்தச் சிங்கத்தை வம்புக்கு இழுக்கணும்னே, சிங்கத்தோட குகைக்கு முன்னாடி நின்னு சத்தம் போட்டுட்டே இருந்ததுங்க.

ஒரு நாள், ஒரு சின்ன விலங்கு அந்தச் சிங்கத்துக்கிட்ட வந்து, ‘நீங்க ஏன் இவ்வளவு அமைதியா இருக்கீங்க? அவங்க உங்களை என்னென்னவோ பேசுறாங்க… நீங்க ஏன் திருப்பி அடிக்க மாட்டேங்குறீங்க? அவங்களுக்கு பயந்துட்டீங்களா?’ அப்படின்னு கேட்டுச்சாம்.

அதுக்கு அந்தச் சிங்கம் சிரிச்சுக்கிட்டே, ‘நான் அமைதியா இருக்கிறது பயத்துல இல்ல… என் பலம் என்னன்னு எனக்குத் தெரியும். என்னை வம்புக்கு இழுக்கிறாங்களே… அவங்ககிட்ட போய் கேளு, உங்க அப்பாவே (முன்னாள் சிங்கம்) இப்போ காணோம்! நான் சின்சியரா வேலை செய்ய வந்துருக்கேன். வீணா சத்தம் போடுறவங்களுக்கு பதில் சொல்ல எனக்கு நேரமில்லை’ அப்படின்னு சொல்லிட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போயிடுச்சாம்.

இந்தக் கதையைச் சொல்லி முடித்த முதலமைச்சர் விஜய், அதனைத் தற்போதைய சட்டமன்ற அரசியல் சூழலோடு ஒப்பிட்டு, எதிர்க்கட்சிகளுக்குப் புரியும் படி இரண்டு முக்கியப் பாடங்களை உணர்த்தினார். அதாவது  நாங்கள் ஏதோ திடீரென்று ஒரு கூட்டத்தில் இருந்து நேரடியாக வந்து இந்த முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிடவில்லை. கடுமையான உழைப்பிற்குப் பிறகுதான் இந்த உயரத்திற்கு வந்துள்ளோம். சட்டமன்றத்தில் யார் எவ்வளவு சத்தம் போட்டாலும், மக்கள் நலனுக்காக த.வெ.க அரசு சின்சியராக உழைக்கும் எனத் திட்டவட்டமாக முழங்கினார்.

த.வெ.க அரசு எதிர்க்கட்சிகளின் வீணான சலசலப்புகளுக்கு உடனுக்குடன் பதில் தராமல் அமைதி காப்பது பயத்தினால் அல்ல; அது மக்கள் தங்களுக்கு வழங்கிய ஆட்சியைப் பொறுப்புடனும் நிதானத்துடனும் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தால் மட்டுமே என்பதை இந்தக் கதை மூலம் அழுத்தமாகத் தெரிவித்தார்.