மேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள ‘தஹ்ராம்-அங்கர்போடா’ என்ற கிராமம், இந்திய எல்லைக்குள் அமைந்திருந்தாலும் அந்நாட்டின் சட்டங்கள் மற்றும் கலாச்சாரத்தைப் பின்பற்றும் ஒரு ஆச்சரியமான இடமாகும். சுமார் 18.5 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்தக் கிராமம், நான்கு பக்கமும் இந்திய நிலப்பகுதியால் சூழப்பட்டிருந்தாலும், இது வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு பகுதியாகும்.
இங்கு வாழும் மக்கள் இந்திய ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக வங்காளதேச நாணயத்தையே பயன்படுத்துகின்றனர்; வங்காளதேசத்தின் தேசியக் கொடியை ஏந்துகின்றனர் மற்றும் அந்நாட்டின் குடிமைச் சேவைகளையே பெறுகின்றனர்.
இந்திய நிலப்பகுதிக்குள் வங்காளதேசத்தின் அடையாளமாகத் திகழும் இந்தக் கிராமத்திற்குச் செல்ல கட்டுப்பாடுகள் அதிகம் என்பதால், இது எல்லைப் பகுதியில் உள்ள ஒரு தனித்துவமான இடமாக விளங்குகிறது.
இந்த கிராமத்தின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. 1992-ம் ஆண்டு வரை இந்த மக்கள் வங்காளதேசத்துடன் இணைய முறையான பாதை இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர். பின்னர், 1974-ம் ஆண்டு இந்தியா-வங்காளதேச ஒப்பந்தத்தின்படி, ‘தீன் பிஃகா காரிடார்’ என்ற சிறிய பாதை வங்காளதேசத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
தொடக்கத்தில் சில மணிநேரம் மட்டுமே திறக்கப்பட்ட இந்த வழி, 2011 முதல் 24 மணிநேரமும் திறக்கப்பட்டு, கிராம மக்களின் வாழ்வைச் சுலபமாக்கியது.
2015-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க எல்லைப் பரிமாற்றங்கள் நடந்தபோதும், தஹ்ராம்-அங்கர்போடா அந்தப் பரிமாற்றத்தில் சேர்க்கப்படவில்லை. இதனால், இந்திய எல்லைக்குள் இருக்கும் ஒரே பெரிய வங்காளதேச நிலப்பகுதியாக இது இன்றும் நீடிக்கிறது.
