இலங்கையில் நடைபெற்று வரும் இந்தியா ஏ, இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரின் போது, இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இலங்கை வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

சூப்பர் ஓவரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இலங்கை வீரர் விஷென், வைபவ்வை கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வைபவ், அந்த வீரரைத் தள்ளியதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், வைபவ் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, இச்சம்பவத்தில் பிசிசிஐ தலையிடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது போன்ற மைதானத்திலான சம்பவங்களுக்குப் போட்டி நடுவர்கள் மற்றும் அதிகாரிகளே முடிவெடுப்பார்கள் என்றும், அதில் வாரியம் தலையிட முடியாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

களத்தில் நடந்த அந்தச் சம்பவம் விளையாட்டின் ஒரு பகுதி மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ள அவர், வைபவ் மீது பிசிசிஐ எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.