பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், இயற்கை உபாதைக்காகச் சென்ற பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 11-ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், அந்தப் பெண்ணின் உடல் உறுப்புகளில் கத்திகளால் காயங்களை ஏற்படுத்தி, மிகவும் கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளனர்.

ஆரம்பத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அந்தப் பெண், தொடர்ந்து கடுமையான வலியால் பாதிக்கப்பட்டதால் நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில், அவரது பிறப்புறுப்புக்குள் தோட்டா, கல் மற்றும் மரக்கட்டை போன்ற பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்களால் வெளியே எடுக்கப்பட்டது.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துப் பெகுசராய் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, துணைக் கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் பாண்டே தலைமையில் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் மூன்று மாதங்களுக்கு முன்பே இதே கும்பல் தனது வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்ததாகவும், தாக்குதல் நடத்தியதாகவும் புகார் அளித்திருந்ததாகக் கூறியுள்ளார்.

ஆனால், அன்று காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததே இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அலட்சியமாகச் செயல்பட்ட காவலர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இச்சம்பவம் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.