அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஊழியர், தனக்கு அவசர அறுவை சிகிச்சை நடக்கும் நாளன்றே அலுவலகக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அவரது மேலாளர் கட்டாயப்படுத்தியதாக ரெடிட் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். பிரபலங்களுடன் நெருங்கிப் பணியாற்றும் ஒரு “கனவு வேலை” என்று நினைத்துச் சேர்ந்த இடத்தில், கடந்த ஓராண்டாக அவர் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்பட்டபோது, விடுப்பு வழங்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாளே அவரை மீண்டும் வேலைக்கு வருமாறும் மேலாளர் வற்புறுத்தியுள்ளார். தான் ஒரு தற்காலிக ஒப்பந்த ஊழியர் என்பதால், நிர்வாகம் தன்னைத் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாகவும், இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அந்த ஊழியர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த ரெடிட் பதிவு, கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை கலாச்சாரம் மற்றும் ஊழியர்களின் உரிமைகள் குறித்த பெரிய விவாதத்தை நெட்டிசன்கள் மத்தியில் கிளப்பியுள்ளது. அந்த ஊழியரின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பல நெரிசன்கள், இது போன்ற மோசமான நச்சுத்தன்மை வாய்ந்த பணியிடத்தை விட்டு உடனே விலகுவதே நல்லது என்று அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சிலர், மனிதநேயமற்ற முறையில் நடந்துகொண்ட அந்த மேலாளர் மற்றும் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம், தற்காலப் பணியிடங்களில் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
