டெல்லி ஹௌஸ் ரானி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சக ஊழியர்களின் உயிரைக் காப்பாற்றிவிட்டுத் தற்போது படுக்கையில் முடங்கிக் கிடக்கும் 32 வயது இளைஞர் ரோஹித், வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார். பீகாரைச் சேர்ந்த ரோஹித், தனது குடும்பத்துடன் டெல்லியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவர் வேலை பார்த்து வந்த விடுதியின் சமையலறையில் எதிர்பாராதவிதமாகத் தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்கப் போராடிய ரோஹித், முதல் தளத்தில் உள்ள அறையில் இரு ஊழியர்கள் சிக்கியிருப்பதை அறிந்தார். உடனடியாகத் தடிமனான புகை மூட்டத்திற்கு நடுவே மேலே சென்ற அவர், அங்கிருந்த குளியலறையின் கண்ணாடியை உடைத்து, சக ஊழியர்களான ராஜ் மற்றும் குந்தன் ஆகிய இருவரையும் கீழே குதிக்கச் செய்து அவர்களின் உயிரைக் காப்பாற்றினார்.

இருப்பினும், ரோஹித் இறுதியாகக் கீழே குதித்தபோது அவரது காலில் கண்ணாடி குத்தியதோடு, முதல் தளத்தில் இருந்து விழுந்ததில் அவரது இடுப்பு எலும்பு முற்றிலும் உடைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, இடுப்பில் இரண்டு இரும்புத் தண்டுகள் பொருத்தப்பட்டுத் தற்போது முழு ஓய்வில் உள்ளார்.

நடக்கவும் முடியாமல், படுக்கையை விட்டுக் கூட எழ முடியாமல் முடங்கியுள்ளதால், அவரது குடும்பம் கடந்த சில நாட்களாகக் கடும் பட்டினியால் வாடி வருகிறது. கணவரைக் கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவியும் வேலைக்குச் செல்ல முடியாததால், வாடகை கொடுக்கவும், குழந்தைகளுக்கு உணவளிக்கவும் முடியாமல் தவித்து வருகின்றனர். மற்றவர்களுக்கு நிதியுதவி வழங்கும் அரசு, சக மனிதர்களைக் காப்பாற்றிவிட்டுப் படுக்கையில் கிடக்கும் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க ரோஹித் கோரிக்கை விடுத்துள்ளார்.