மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் சோனேகான் பகுதியில், ராணுவ வீரரின் மனைவியைக் கடத்தி, போதைப்பொருள் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட முயன்ற வழக்கில் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 24 வயது பெண்ணின் கணவர் இந்திய விமானப்படையில் (IAF) பணியாற்றி வருகிறார். அவர் பணி நிமித்தமாக வேறு நகரில் இருந்த சமயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அந்தப் பெண்ணை, அவரது முன்னாள் பள்ளித் தோழன் நிலம் வாங்குவது போல் நடித்து ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாற்றைக் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை ஆபாசமாகப் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, பெண்ணிடம் இருந்து ரூ.3.09 லட்சம் பணத்தைப் பறித்ததோடு, அவரைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியும் வந்துள்ளார்.
மேலும், அந்தப் பெண்ணை இஸ்லாமிய மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தி, பல்வேறு மாந்திரீக மற்றும் மதச் சடங்குகளைச் செய்யக் கட்டாயப்படுத்தியுள்ளனர். கடந்த மே 31 அன்று, அந்தப் பெண்ணைக் களம்மேஸ்வர் பகுதிக்குக் கடத்திச் சென்று, அங்கிருந்த ஒரு மௌலானாவிடம் அறிமுகப்படுத்தியுள்ளனர். பின்னர், மதம் மாறிவிட்டதாகக் கூறி, ஒரு பாழடைந்த இடத்திற்கு அழைத்துச் சென்று மூவர் சேர்ந்து மீண்டும் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் வீடு திரும்பிய தனது கணவரிடம் அந்தப் பெண் நடந்த கொடுமைகளைக் கூறி கண்ணீர் மல்கியுள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவரை அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றம் அவர்களுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்துள்ள நிலையில், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
