இந்தியாவில் இருமல் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகையான சிரப் (Syrup) மருந்துகளையும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல் மருந்தகங்களில் நேரடியாக விற்பனை செய்ய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிரடித் தடை விதித்துள்ளது. இந்த புதிய உத்தரவு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம், பொதுமக்கள் இனி எந்தவொரு சிரப் மருந்தையும் மருந்தகங்களில் இருந்து நேரடியாக ‘ஓவர் தி கவுண்டர்’ (Over the Counter) முறையில் வாங்க முடியாது. பதிவுசெய்யப்பட்ட மருத்துவரிடம் இருந்து பெறப்பட்ட முறையான மருத்துவப் பரிந்துரைச் சீட்டைக் காண்பித்தால் மட்டுமே மருந்தகங்கள் இனி சிரப் மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை கடந்த ஜூன் 9-ஆம் தேதி வெளியிட்ட ‘மருந்துகள் (ஐந்தாவது திருத்தம்) விதிகள், 2026’-இன் கீழ் இந்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, 1945-ஆம் ஆண்டின் மருந்து விதிகளின் கீழ் உள்ள ‘அட்டவணை K’ பிரிவில் இருந்து ‘சிரப்’ (Syrups) என்ற வார்த்தையை மத்திய அரசு நீக்கியுள்ளது. குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் சில மருந்துகளின் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு விலக்கு அளிக்கும் பட்டியலே இந்த அட்டவணை K ஆகும்.
கடந்த 2025 டிசம்பரில் இதுகுறித்த வரைவு விதிகள் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்தத் திருத்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து, 1940-ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி மத்திய அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
