கோவையைச் சேர்ந்த ஜெயேஷ் கண்ணா என்பவர் ஓமனில் என்ஜினீயராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி சங்கீதா, கடந்த 2015-ம் ஆண்டு தனது பெற்றோர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மனைவி தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றது குறித்துத் தகவல் தெரிவிக்காததால் அதிருப்தியடைந்த ஜெயேஷ் கண்ணா, குறிப்பிட்ட சில நாட்கள் அவருடன் தொலைபேசியில் பேசுவதை நிறுத்தியதாகக் கூறப்பட்டது.

இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலே சங்கீதாவை தற்கொலைக்குத் தூண்டியதாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ஜெயேஷ் கண்ணா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றங்கள், வரதட்சணை கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி குடும்ப உறுப்பினர்களை விடுவித்தன. ஆனால், மனைவியுடன் 13 நாட்கள் பேசாமல் இருந்தது மனரீதியான கொடுமையாகும் என்று கருதி, ஜெயேஷ் கண்ணாவை குற்றவாளி என அறிவித்துத் தீர்ப்பளித்தன.

இதை எதிர்த்து ஜெயேஷ் கண்ணா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு, மனரீதியான கொடுமை என்பது ஒவ்வொரு வழக்கின் தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும் என்று தெரிவித்தது.

மேலும், 13நாட்கள் சங்கீதாவுடன் பேசவில்லை என்ற குற்றச்சாட்டு உறுதியான ஆதாரங்களால் நிரூபிக்கப்படவில்லை என்றும், திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும், அதன் காரணமாகச் சில காலம் உரையாடல் இல்லாத நிலை உருவாவதும் இயல்பான விஷயமாகும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அதனை மட்டுமே மனரீதியான கொடுமையாகக் கருத முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஜெயேஷ் கண்ணாவுக்கு எதிராக வழங்கப்பட்டிருந்த தீர்ப்பை ரத்து செய்து, அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுவித்து அதிரடி உத்தரவிட்டனர்.