மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஹாபி ட்ரைப்’ (Hobby Tribe) என்ற புதிய தலைமுறை ஸ்டார்ட்அப் நிறுவனம், தனது அலுவலகத்தில் 64 வயதான முதியவர் ஒருவரை இன்டர்னாக (பயிற்சி ஊழியர்) பணியமர்த்தி கார்ப்பரேட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக, கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் மட்டுமே இன்டர்ன்ஷிப் சேரும் நிலையில், இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஜோசுவா சலின்ஸ் எடுத்த இந்த வித்தியாசமான முடிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த 64 வயது முதியவர் அலுவலகத்தில் கணினியைப் பயன்படுத்துவது மற்றும் சக இளம் ஊழியர்களுடன் கலந்துரையாடும் வீடியோவை ஜோசுவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “எங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் 64 வயதான இன்டர்ன் இணைந்துள்ளார், நாங்கள் எடுத்த மிகச்சிறந்த முடிவு இதுதான்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DZXTIP7MR9T/?utm_source=ig_embed&ig_rid=ae99ed00-d43d-4e87-a02e-800f526abadf
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி குறுகிய காலத்திலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. பணத்திற்காகவோ அல்லது வாழ்வாதாரத்திற்காகவோ அல்லாமல், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் துடிப்புடன் அந்த முதியவர் பணியாற்றுவதைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இத்துறையில் பல ஆண்டுகள் தொழில் அனுபவம் கொண்ட இவருடைய வருகை, நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், நிறுவனத்தின் கலாச்சாரத்தை மேம்படுத்தவும், இளம் ஊழியர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கவும் பெரிதும் உதவுகிறது என ஜோசுவா தெரிவித்துள்ளார். இந்த நிஜ சம்பவத்தை பார்த்த பல இணையவாசிகள், ராபர்ட் டி நிரோ மற்றும் ஆன் ஹாத்வே நடிப்பில் வெளியாகி உலகப் புகழ்பெற்ற ‘தி இன்டர்ன்’ (The Intern) என்ற ஹாலிவுட் திரைப்படத்துடன் ஒப்பிட்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
