மராட்டிய மாநிலத்தில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த யோகேஷ் பாட்டீல் என்பவர், கோடை விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தார்.
நேற்று காலை வழக்கம் போல பால் கொடுப்பதற்காகப் பால்காரர் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். நீண்ட நேரம் கதவைத் தட்டியும் யாரும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார்.
அப்போது வீட்டுக்குள் தலைமை ஆசிரியர் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தூக்கில் தொங்கிய தலைமை ஆசிரியர் மற்றும் படுக்கையில் பிணமாகக் கிடந்த அவரது மனைவி மற்றும் 11, 9 வயதுடைய இரண்டு மகன்களின் உடல்களையும் மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தலைமை ஆசிரியர் தனது குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, அவரும் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதற்கிடையே,சம்பவ இடத்திலிருந்து போலீசார் 22 பக்கங்கள் கொண்ட தற்கொலை கடிதம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
அதில், பங்குச் சந்தை முதலீட்டில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்குச் சந்தை முதலீட்டில் அவருக்கு சுமார் 1.8 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் சுமை அதிகரித்து மனவேதனையில் இருந்துள்ளார்.
மேலும், தங்களின் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது கடன் மற்றும் சொத்து விவரங்களையும் அந்தக் கடிதத்தில் விரிவாக எழுதியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
