உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென நீதிபதியின் இருக்கையில் அமர்ந்து, “இன்று நான் தான் மாவட்ட நீதிபதி” என்று முழக்கமிட்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை சுமார் 9 மணி அளவில், கூடுதல் மாவட்ட நீதிபதி யஜுவேந்திர விக்ரம் சிங் விடுமுறையில் இருந்த ஒரு நீதிமன்ற அறைக்குள் நுழைந்த அந்தப் பெண், அங்கிருந்த ஊழியர்களிடம் நீதிபதி எப்போது வருவார் என்று கேட்டுள்ளார்.

பின்னர், யாரும் எதிர்பாராத விதமாக நேராக நீதிபதியின் மேடைக்குச் சென்று அவரது நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அங்கிருந்த மேஜையைத் தட்டி, “ஆர்டர், ஆர்டர்! இன்று நான் தான் மாவட்ட நீதிபதி. சாட்சிகளையும் ஆதாரங்களையும் என் முன்னால் சமர்ப்பியுங்கள்!” என்று சினிமா பாணியில் கூச்சலிடத் தொடங்கினார். மேலும், மேஜையில் இருந்த வழக்குக் கோப்புகளையும் எடுத்து ஆராயத் தொடங்கினார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நீதிமன்ற ஊழியர்களும் வழக்கறிஞர்களும் அந்தப் பெண்ணை நாற்காலியில் இருந்து இறங்குமாறு பலமுறை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர் வர மறுத்ததுடன், தன்னை நெருங்கியவர்களைப் பார்த்து சத்தம்போட்டு மிரட்டினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ரகளைக்குப் பிறகு, பெண் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பெண்ணை நாற்காலியில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்ததை அடுத்து, போலீசார் அவரை எச்சரித்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தின் உயர் பாதுகாப்புப் பகுதியைத் தாண்டி அந்தப் பெண் எவ்வாறு நீதிபதியின் இருக்கை வரை சென்றார் என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.