உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்கள் உணவு அல்லது திண்பண்டங்களை அன்பளிப்பாக வழங்குவது வழக்கம். ஆனால், சோமாட்டோ (Zomato) ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர் கொடுத்த இலவச பிட்சாவை (Pizza) மிகவும் வித்தியாசமான முறையில் மறுத்த விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

முகுல் தேகானே என்ற நபர், சோமாட்டோ செயலியில் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ (Buy-1-Get-1) என்ற சலுகையின் கீழ் இரண்டு பிட்சாக்களை ஆர்டர் செய்துள்ளார். கடுமையான மழையையும் பொருட்படுத்தாமல் உணவை டெலிவரி செய்த ஊழியரைப் பாராட்டும் விதமாக, தனக்குத் தேவையான ஒரு பிட்சாவை வைத்துக்கொண்டு, மற்றொரு பிட்சாவை அந்த ஊழியரிடம் கொடுத்து “இது உங்களுக்கு” என்று முகுல் கூறியுள்ளார்.

 

ஆனால், அந்தப் பிட்சாவை வாங்க மறுத்த டெலிவரி ஊழியர், “இந்த குப்பையை நீங்களே சாப்பிடுங்கள், நான் வீட்டில் சமைத்த உணவை மட்டும்தான் சாப்பிடுவேன்” என்று முகத்திற்கு நேராகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஊழியரின் இந்த அதிரடி பதிலால் நிலைகுலைந்து போன முகுல், இந்த நெகிழ்ச்சியான மற்றும் நகைச்சுவையான அனுபவத்தை தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் பதிவு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பல நெட்டிசன்களும் தங்களுக்கு நேர்ந்த இது போன்ற சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், டெலிவரி ஊழியர்களுக்கு உணவுகளை வழங்குவதை விட, 30 அல்லது 50 ரூபாய் ‘டிப்ஸ்’ (Tips) பணமாக வழங்கினால் அவர்கள் இன்னும் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.