மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சியான  திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் கொல்கத்தா காளிகாட் இல்லத்தில், மேற்கு மிதினாபூர் மாவட்ட போலீசார் இன்று சனிக்கிழமை அதிகாலை திடீர் சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுஜாய் ஹஸ்ரா தொடர்புடைய பணமோசடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து வழக்கு ஒன்றில், அபிஷேக் பானர்ஜியின் தனிப்பட்ட செயலாளர் சுமித் ராயைத் தேடி, சல்போனி பகுதி போலீசார் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், சோதனையின் போது சுமித் ராய் அந்த வீட்டில் இல்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுமித் ராய் ஏற்கனவே நிலக்கரி கடத்தல் மற்றும் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் வழக்குகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நள்ளிரவு சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அபிஷேக் பானர்ஜி, மிகுந்த ஆக்ரோஷத்துடனும் கோபத்துடனும் கேள்விகளுக்குப் பதிலளித்தார். சுமித் ராய் எங்கே இருக்கிறார்? அவரை உங்கள் வீட்டில் தான் ஒளித்து வைத்துள்ளீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “நான் ஒன்றும் புலனாய்வு அமைப்பின் பிரதிநிதி அல்ல; அவரை நான் ஒளித்து வைத்துள்ளேனா இல்லையா என்பது எனது முழு வீட்டையும் சோதனையிட்ட போலீசாருக்குத்தான் தெரியும், அவர்களிடம் போய்க் கேளுங்கள்” என்று கொந்தளித்தார்.

மேலும், தொடர்ந்து குடைந்து குடைந்து கேள்வி கேட்ட பிரபல ‘ரிபப்ளிக்’ செய்தி நிறுவன நிருபரைப் பார்த்து, “உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் இருந்தால், ரிபப்ளிக் டிவியை விட்டுவிட்டு நேராகப் போய் புலனாய்வு அமைப்பில் சேர்ந்து விடுங்கள்” என்று சாடினார். மேலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே தங்கள் கட்சி நிர்வாகிகள் குறிவைக்கப்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.