உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், அங்கிருந்த தெருநாய்களைப் பிடிக்கும் குழுவினர் வலையிட்டு கொடூரமான முறையில் பிடித்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தையும், நாய் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், நாய்கள் பயந்து அலறும் சத்தங்கள் கேட்பது பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.
அந்தப் பகுதியின் குடியிருப்போர் நலச் சங்கம் அளித்த புகாரின் பேரில், “ஆபத்தான மற்றும் ஆக்ரோஷமான நாய்கள்” என்ற விதியின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், முறையான மருத்துவ அல்லது நடத்தை பரிசோதனை ஏதுமின்றி, சாதாரணமாக இருக்கும் நாய்களைக் கூட சிலர் வேண்டுமென்றே துன்புறுத்தி, ஆக்ரோஷமானவை எனப் முத்திரை குத்தி, அதிகாரிகளை வைத்துக் கடத்துவதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Dogs picked up for sterilisation deserve dignity, compassion, and humane handling.
We respectfully urge the authorities to ensure that all dog-catching staff are properly trained in animal welfare and humane capture techniques. These voiceless souls should never be subjected to… pic.twitter.com/sUOmsK3Y5A
— Vidit Sharma 🇮🇳 (@TheViditsharma) June 12, 2026
இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, நெட்டிசன்கள் இரு பிரிவாகப் பிரிந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாய் ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள், “நாய்களைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகள் அவசியம் என்றாலும், அவற்றை மனிதநேயமற்ற முறையில் கையாள்வது கண்டிக்கத்தக்கது; வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவது நாகரீக சமூகத்திற்கு அழகல்ல” எனப் பதிவிட்டு வருகின்றனர்.
அதே வேளையில், மற்றொரு தரப்பினர், “குடியிருப்புப் பகுதிகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குத் தெருநாய்களால் ஆபத்து ஏற்படும்போது, சட்டப்பூர்வமான வலையிடும் முறையைப் பயன்படுத்திப் பிடிப்பதில் என்ன தவறு இருக்கிறது?” என அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். இதனால் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் தெருநாய்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
