ஓமன் வளைகுடா கடற்பகுதியில் ‘எம்.டி. ஜல்வீர்’ என்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் நிலவி வரும் தீவிரப் போர்ச் சூழலின் நேரடி விளைவாகவே இத்தகைய அச்சுறுத்தல்கள் தொடர்வதாக கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்தச் சம்பவம் “மிகவும் கவலைக்குரியது” என்றும் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச கடல்வழிப் பாதைகளில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உலக நாடுகள் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

தாக்குதலுக்குள்ளான இந்தக் கப்பலில் பயணித்த 24 இந்திய மாலுமிகளில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமாகியிருந்த எஞ்சிய 3 இந்திய மாலுமிகளும் இத்தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து தாயகம் கொண்டு வருவதற்காக, மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம் ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பலாவு நாட்டு கொடியுடன் பயணித்த ‘சென்ட்ரல் பார்க்’ நிறுவனத்தின் இந்த ‘எம்.டி. ஜல்வீர்’ கப்பல் மீதான தாக்குதல், சர்வதேச கடல் வணிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.