பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சுப. வீரபாண்டியன், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளைத் திரைப்படக் கதாபாத்திரங்களோடு ஒப்பிட்டுக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில், “நான் முதலமைச்சர் விஜய்யை ஒரு நாகரிகமானவர் என்றுதான் நினைத்தேன், ஆனால் போகப்போகத்தான் தெரிகிறது அவருக்கும் நாகரிகத்திற்கும் சம்பந்தமில்லை என்று.
சில நேரங்களில் அவர் திரைப்படத்தில் வருகிற சாதுவான ‘அம்பி’ மாதிரி இருக்கிறார்; சில நேரங்களில் ‘அந்நியன்’ மாதிரி மாறுகிறார். உண்மையில் அவர் அம்பிதானோ என்று எனக்குத் தோன்றுகிறது. ஏதோ அந்நியனாக லாட்டரி சீட்டு விற்கிற யாரோ சிலர் இவருக்குப் பின்னால் நின்று கொண்டு இவரை இயக்குகிறார்கள்” என்று மிக ஓப்பனாகச் சாடியுள்ளார். மேலும், சமீபகாலமாக இணையத்தில் பரவி வரும் AI எடிட்டிங் அரசியல் குறித்துப் பேசிய சுபவி, “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே… உங்கள் படத்தைப்போட்டு, உங்கள் காலைத் தொட்டுக் கும்பிடுவது போல உங்கள் அப்பா, அம்மா படங்களை AI-இல் போட்டால் உங்களுக்கு வலிக்குமா, வலிக்காதா?
எங்கள் பிள்ளைகளுக்கும் AI தொழில்நுட்பம் தெரியும், ஆனால் அது எங்கள் நாகரிகம் இல்லை என்பதால் நாங்கள் அதைச் செய்ய மாட்டோம்” என்று முதலமைச்சர் விஜய்க்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். தவெக மற்றும் திமுக ஆதரவாளர்களிடையே ஏற்கனவே இணையத்தில் மோதல் முற்றியுள்ள நிலையில், சுப. வீரபாண்டியன் பேசிய இந்த காரசாரமான வீடியோ தற்போது எக்ஸ் தளத்தில் பயங்கர புயலைக் கிளப்பி வருகிறது.
