துருக்கியின் மர்மரா கடலில் கடந்த 10 மாதங்களாகக் கைவிடப்பட்ட நிலையில் நின்ற ‘அஜரா சி’ என்ற சரக்குக் கப்பலில் தவித்துக் கொண்டிருந்த நான்கு இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மங்கோலிய நாட்டுக் கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலின் உரிமையாளர்கள் கடந்த ஜனவரி மாதம் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதனால் கப்பலும் அதில் இருந்த மாலுமிகளும் அங்கேயே கைவிடப்பட்டனர்.

மாலுமிகள் குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கடுமையான சிரமங்களைச் சந்தித்த நிலையில், சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் கடல்சார் ஊழியர்கள் ஒற்றுமை சங்கம் ஆகியவை அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வந்தன.

சர்வதேச கடல்சார் சட்டப்படி அவசர காலங்களை எதிர்கொள்ள கப்பலில் எப்போதும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாலுமிகள் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், இந்த இந்திய மாலுமிகளுக்குப் பதிலாகப் புதிய குழுவினர் யாரும் அங்கு அனுப்பப்படவில்லை.

இதனால் கப்பல் தற்போது மாலுமிகள் எவருமின்றி விடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கப்பல்களும் மாலுமிகளும் இதுபோன்று கைவிடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 410 கப்பல்கள் கைவிடப்பட்டு 6,200-க்கும் மேற்பட்ட மாலுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதில் இந்தியர்களே மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இத்தகைய சம்பவங்களில் துருக்கி முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.